தமிழ் வாரம் 2026 இன் பறைசாற்றுதலை, பிப்ரவரி 23 அன்று காலை ஜார்ஜியா ஆளுநர் கெம்ப் மற்றும் முதல் பெண்மணியிடம் இருந்து  பெருமையும் பெருமிதத்துடன் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களோடு பெற்றுக் கொண்டோம்!  2024, 2025 ஆம் ஆண்டிற்குப் பிறகு  தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜார்ஜியாவில் நாம் பெரும் தமிழ் வார பறைசாற்றுதல் இது. 

பிப்ரவரி 21 முதல் இன்று வரை, 7 நாட்கள், 63 காணொளிகள் , அடுத்தத் தலைமுறையின் மழலைத் தமிழ், கதை சொல்லல், திருக்குறள் மற்றும் இலக்கியப்பாடல்கள், சிறப்புக் கட்டுரைகள், தமிழ்ச் சங்கத் தலைவர்களின் வாழ்த்துகள் , பிரபலங்களின் வாழ்த்துரைகள் என்று 7 நாட்கள் தமிழ் வாரத்தை கொண்டாடித் தீர்த்து விட்டோம். இல்லை இல்லை, நிச்சயம் தீரவில்லை, 7 நாள் கொண்டாட்டத்திற்குப்  பிறகு நம்முள் நம் அன்னை தமிழ் இன்னும் நிறைந்து தான் கிடக்கின்றாள் .

மேலும் இது போன்ற தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள GATS இலக்கியக்குழுவோடு (ilakkiyakuzhu@gatamilsangam.org ) தொடர்ந்து இணைந்திருங்கள்! 

மிகக் குறுகிய காலத்தில் இத்தனைக் காணொளிகளை மக்களிடம் இருந்து பெற்று, அதனை ஒருங்கிணைத்து , ஒவ்வொரு காணொளியையும் பார்த்து ரசித்து அதற்கேற்றாற்போல் குறிப்பெழுதி நமக்கு வழங்கிய GATS இலக்கியக் குழுவிற்கு இந்நேரத்தில் உங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றியினை உரித்தாக்குகிறோம். 

அதுபோல் இத்தனை காணொளிகளையும்  தொகுத்து , கத்தரித்து , வலையொளியில் பதிவேற்றம் செய்து உதவிய நமது சுற்றோலை மற்றும் தகவல் தொடர்பு குழுவிற்கும் இந்நேரத்தில் நம் அனைவரின் நன்றியினை உரித்தாக்குகிறோம். மற்றும் இந்நிகழ்ச்சிக்கு தங்கள் ஒத்துழைப்பைத் தந்த குழுவினருக்கும் அட்லாண்டா தமிழ் மக்களுக்கும்  நன்றி பல.

வார நாளில் பல்வேறு பணிச் சூழலுக்கு நடுவில் இப்படி ஒரு நிகழ்ச்சியினை காணொளிகள் மூலமாக வழங்குவது நம் தன்னார்வலர்களின்  அர்ப்பணிப்பின்றி  செய்திருக்க முடியாது ! 

நமது அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தலைமுறை தாண்டியும் தமிழ் வளர்ப்போம் என்ற முழக்கத்தோடு,  இந்த 2026ஆம் ஆண்டு முழுவதும்  இன்னும் பல தமிழினைப் போற்றும் நிகழ்வுகளை நடத்திட விழைகிறோம்! உங்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்! 

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

நன்றி,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்
Greater Atlanta Tamil Sangam 2026