GATS 2024 MTV Thanks and Photos/Videos
முத்தமிழ் விழா 2024 – நன்றி மடல்

அனைவருக்கும் வணக்கம்
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் இந்த வருடம் பல புது நிகழ்ச்சிகளுடன் முத்தமிழ் விழாவை சிறப்பாக நடத்தி முடித்தது. “ஐம்பூதங்கள்” என்கிற கருப்பொருளை உள்ளடக்கி, குழந்தைகள் மற்றும் பெரியோருக்கான தமிழ்ப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சியென பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மிக வெற்றிகரமாக நடந்து முடிந்த 2024 முத்தமிழ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் ஆதரவும் பங்களிப்பும் இந்த விழாவை மிகவும் வெற்றிகரமாக்கியது.
இவ்வருடம் முத்தமிழையும் உள்ளடக்கி 12 விதமான போட்டிகள், ஐம்பூதங்களான “நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம்” என 5 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
மொத்தம் 232 பங்கேற்பாளர்கள் பல்வேறு வயது பிரிவுகளில் 672 போட்டிகளில் பங்கேற்றது சாதனையாகவே கருதப்படுகிறது. மொத்தம் 115 பதக்கங்கள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
போட்டிகள் பின்வருமாறு:
- இயல்: பேச்சு, வாசித்தல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, கதை, கவிதை, ஓவியம், திருக்குறள் / பழமொழி
- இசை: இசைக்கருவி, தனிப்பாடல், இசைக்குழு
- நாடகம்: தனி நடனம், ஓரங்க நாடகம், மாறுவேடம்
- தமிழர் தற்காப்புக்கலை
2024 முத்தமிழ் விழா கொண்டாட்டம் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. காலையில் தமிழ்ப் போட்டிகளும் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக திருமிகு அகத்தியன் ஜான் பெனடிக்ட் அவர்கள் “தமிழோடு விளையாடு” என்கிற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
தமிழ்ச்சங்க இசை மழைக் குழுவின் இன்னிசையில் தொடங்க, பல்வேறு தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நடனம் மற்றும் நாடகங்கள் நடந்தேறின. ‘ஐம்பூதங்கள்’ என்கிற தலைப்பில் திருமிகு ஜெயா மாறன் அவர்களின் உரையை தொடர்ந்து, தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்டங்களை மையமாகக் கொண்ட ஒரு பாடல், ஒப்பாரி மற்றும் கும்மி பாடலுடன் திருமிகு நிர்வன் சக்கிரவர்த்தி அவர்களின் சிறப்பான கிராமிய விருந்து என பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறின.
நிகழ்ச்சியின் இடையே போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பதக்கங்களும் வயது பிரிவு வாரியாக வழங்கப்பட்டன. இந்த முறை புது முயற்சியாக தமிழ் பள்ளிகளுக்கான “சுழற் கோப்பை” அறிமுகம் செய்யப்பட்டது. காலையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு புள்ளிகள் அளிக்கப்பட்டு இறுதியில் அதிக புள்ளிகள் பெற்ற “மேரியட்டா தமிழ் பள்ளிக்கு” 2024-க்கான சுழற் கோப்பை வழங்கப்பட்டது.
2024 ஆம் வருட முத்தமிழ் விழாவின் மாபெரும் வெற்றிக்கு பின்னணியில் உழைத்த பல்வேறு தன்னார்வலர்களின் நேரமும், பொறுப்புணர்ச்சியும் முக்கிய காரணம். அவர்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- நடுவர் குழுவிற்கு நன்றிகள் பல (பெயர் விவரம் இணைப்பு – 1 ல் காண்க)
- இளைஞர் தன்னார்வக் குழுவிற்கு நன்றிகள் பல (பெயர் விவரம் இணைப்பு – 2 ல் காண்க)
- நெறியாளர்களுக்கும், மதிப்பீட்டாளர்களுக்கும் நன்றிகள் பல
- தமிழ்ப் பள்ளிகளின் முதல்வர்களுக்கும், போட்டியாளர்களுக்கு நன்றிகள் பல
- தமிழ்ச்சங்க இயக்குனர் குழு மற்றும் செயற்பாட்டுக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றிகள் பல
முத்தமிழ் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவளித்த அனைத்து தமிழர்களுக்கும் நன்றிகள் பல.
விழா புகைப்படங்களைக் காண கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்
https://tinyurl.com/MTV2024pics
தமிழ் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளின் பட்டியல் இணைப்பு – 3 ல் காண்க.
வரும் ஆண்டுகளிலும் இதுபோன்ற நிகழ்வுகளில் உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். தொடர்ந்து தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்போம்!
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி!
அன்புடன்,
முத்தமிழ் விழா ஏற்பாட்டுக் குழு
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்






