செந்தமிழே! உள்ளுயிரே

செப்பரிய நின்பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?

முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்

செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த

அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி

முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!

             – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

நாமநீர் வேலி சூழ் நாட்டினிலே விளைந்த நற்றமிழாம் நம் மொழி என்று தோன்றியது என்றறியோம், எவர் மொழிந்தது என்றறியோம். இத்தகைய தொன்மையும் பழமையும் கொண்ட நம் தாய்மொழியாம் தமிழை ஒரு வாரம் முழுக்க கொண்டாடி மகிழ்ந்தோம்!

ஜார்ஜியா தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வாக, அட்லாண்டா மாநகரத்  தமிழ்ச் சங்கத்தின் சீரிய முயற்சியால், உலகத் தாய் மொழி நாளாம் பிப்ரவரி 21 ஆம் நாளன்று தமிழ் மொழிக்காக ஒரு வாரத்தைப் பெற்றோம். அதன் படி  பிப்ரவரி 21 முதல் 27 வரை, தமிழ் வாரத்தை அட்லாண்டாத் தமிழர்களுடன் கொண்டாடினோம். 

உலகெங்கிலும் வாழும் தமிழ்ச்சங்க தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள், ஏழு நிகழ்ச்சிகளின் வழியே எண்ணற்ற  காணொளிகள், அடுத்தத் தலைமுறை பிள்ளைகளின் மழலைப் பேச்சு மற்றும் கதை சொல்லல், மரபு உணவுகள், மரபுக் கலைகள், கவிதைகள், தமிழாசிரியர்களை நினைவு கூர்தல்  என்று இந்த வாரம் முழுக்க நம் மொழியையும், பண்பாட்டையும், நம் அடையாளத்தையும்,  நம் நெஞ்சினில் சுமந்து கொண்டாடினோம் என்று சொன்னால் அது மிகையாகாது.

நமது தமிழ் வாரத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அந்த நாட்டின் தமிழ்ச் சங்கத் தலைவர்கள் நமக்கு அனுப்பியிருந்த வாழ்த்துக் காணொளிகள்!


ஆலம் விழுதுகள் (அனைத்து வயதினருக்கும்): ஆலம் விழுதுகள் நிகழ்வு மூலம் ஜார்ஜியா மக்கள் தங்கள் மனதில் நிலைத்துள்ள தமிழ் ஆசிரியர்கள் குறித்த நீங்கா நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்! 


குழலினிது யாழினிது (7 வயது வரை): மழலைத் தமிழில்  பேசும் குழந்தைகளின் கொஞ்சும் தமிழை குழலினிது யாழினிது நிகழ்ச்சியில் கண்டும் கேட்டும் மகிழ்ந்தோம்! 


ஒரு கதை சொல்லவா (5 முதல் 15 வயது வரை): ஒரு கதை சொல்லவா? நிகழ்வு மூலம்,  பல வகையான கதைகளை நம் பிள்ளைகள் மொழிய கேட்டு சுவைத்தோம்!


மரபுக் கலைகள் (அனைத்து வயதினருக்கும்): மரபுக் கலைகள் நிகழ்வு மூலம் தமிழர் மரபு கலைகள் மீது அட்லாண்டா தமிழர்களுக்கு இருக்கும் பற்றினையும் அவர்களின் திறனையும் பார்த்து சுவைத்தோம்! 


அமுதே! சுவையே! (18 வயதிற்கு மேல் ): அமுதே! சுவையே!  நிகழ்வு மூலம் தமிழர்களின் மரபு சார் உணவுவகைகள் அவற்றின் செய்முறைகள்,  மற்றும் அவற்றின் பலன்களையும் கண்டோம்!


இயலும் தமிழும் (18 வயதிற்கு மேல்): இயலும் தமிழும் நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் சிறப்பையும் தொன்மையையும் போற்றும் கவிதைகளைக் கண்டு சுவைத்தோம்!


ஒளி வழித் தமிழ் (அனைத்து வயதினருக்கும்): ஒளி வழித் தமிழ் நிகழ்வு மூலம் ஒரு நாள் முழுக்க தமிழ் மொழி மீதுள்ள அன்பை குறுங்காணொளிகளாக பார்த்து மகிழ்ந்தோம்!  


இப்படி ஜார்ஜியா தமிழ் வாரம் கொண்டாட்டம் இனிதே நிறைவடைந்திருந்தாலும் நாம் நாளும் தமிழை நாவிலே ஏந்திப் போற்றிடப் போற்றிட தலைமுறைத் தாண்டியும் தமிழ் மொழி தானாக வளரும். எனவே தமிழோடு நமது பிள்ளைகள் ஒன்றி இருக்க தமிழ்ச் சங்கத்தோடு இணைந்திருங்கள்!

அன்பும் நன்றியும்,

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் – 2025