2026 தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா – நன்றி நவிலல்!
அட்லாண்டா தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் நாற்பத்தாறாவது தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா (2026) பிப்ரவரி14 ஆம் நாள், சனிக்கிழமை வடக்கு க்வினெட் உயர்நிலைப் பள்ளியில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
நிகழ்ச்சி காலை 10 மணிக்குப் போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகளுடன் மிகச் சிறப்பாகத் தொடங்கியது. குழந்தைகளுக்கு லெகோ கட்டமைப்பு, மாறுவேடப்போட்டி என்றும் பெரியவர்களுக்குப் பூ கட்டுதல், வண்ணப் பானை பொங்கல் , மருதாணி, மண்ணின் மணமும்… கைவண்ணமும்! என்றும் பல்வேறு பொங்கல் நேரடி சிறப்புப் போட்டிகளும் இணைய வழி வண்ணப் பொங்கல் கோலப் போட்டி, இன்னிசைப் பொங்கல் ((பாட்டுப் போட்டி), அன்றும், இன்றும், என்றும்: தமிழர் மரபு! – குறுங்காணொளி போட்டி இருந்தன.

அதனைத் தொடர்ந்து பள்ளியின் வரவேற்பறையில் உறுப்பினர்களின் மின்னஞ்சலை சரிபார்க்க முதல் முறையாக, உறுப்பினர் பதிவு மற்றும் நிகழ்வுகள் கண்காணிப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட GATS புதிய கைபேசி செயலி பயன்படுத்தப்பட்டது. க்யூ ஆர் எனப்படும் விரைவு எதிர்வினை குறியீடு (QR Code) மூலம், யாரும் அதிக நேரம் வரிசையில் காத்திருக்காமல் மிகக் குறைந்த நேரத்தில் சீராக அனைவரின் உறுப்பினர் சேர்க்கையும் சரிபார்க்கப்பட்டு எளிதாக விழாவிற்குச் செல்ல இயன்றது.
தொழில்நுட்பத்தின் உதவியால் உறுப்பினர்களின் காலத்தையும் சங்கத்தின் காலத்தையும் சேமிக்க முடிந்தது; இது அனைவருக்கும் கூடுதல் நிறைவை அளித்தது.
சரியாகப் பகல் 12 மணிக்கு, உணவுக் குழு தன்னார்வலர்களின் பெரும் உழைப்பில் 200க்கும் மேற்பட்டோருக்கு சுவையான வாழை இலை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தன்னார்வலர்கள் ஓடி ஓடி சோறு, குழம்பு, கூட்டு ஆகியவற்றைப் பந்திக்குக் கொண்டு வந்ததும், பக்குவமாக உணவை பரிமாறிய விதமும் விழாவுக்கு வந்திருந்தவர்களை நம் ஊர் திருமணப் பந்திக்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையாகாது. எல்லாம் சரியாக சென்ற நிலையில் சாப்பாட்டில் வெள்ளைச் சோறு மட்டும் கொஞ்சம் விரைவிலேயே தீர்ந்து மீண்டும் வரவழைத்தோம், அப்போது ஏற்பட்ட குழப்பத்திற்கு வருந்துகிறோம். அந்த இடைப்பட்ட நேரத்தில் காத்திருந்து உணவருந்திய அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!

விழா அரங்கத்தின் வெளியில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு தொழில் செய்பவர்களின் சாவடிகள் வைக்கப்பட்டிருந்தன. விழாவுக்கு வந்திருந்த அனைவரும் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கியும், மேலும் அது குறித்த செய்திகளைக் கேட்டறிந்தும் பயன்பெற்றதைக் காண முடிந்தது.
தமிழ்ச்சங்கத்தின் அலங்காரக் குழுவின் முயற்சியால், நம் ஊரின் பெட்டிக்கடை வடிவம் வடக்கு க்வினெட் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உயிர்ப்புடன் உருவாக்கப்பட்டது. தமிழ்ச்சங்கத் தன்னார்வலர்கள் அதனை அழகாக அமைத்து, பார்வையாளர்களை பழைய நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றனர்.
அங்கு பஞ்சு மிட்டாய், கடலை மிட்டாய், முறுக்கு மற்றும் குளிர்பானங்கள் போன்ற நம் ஊரின் மாரபு பெட்டிக்கடை பொருட்கள் இடம் பெற்றிருந்தன. பெட்டிக்கடையில் வைக்கப்பட்டிருந்த செய்தித்தாள்கள், புத்தகங்கள் மற்றும் மர நாற்காலி/பெஞ்ச் ஆகியவை அந்தச் சூழலுக்கு உண்மையான பெட்டிக்கடை அனுபவத்தை வழங்கின. அவை அனைத்தும் சேர்ந்து நம் ஊரின் பழைய நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்து, அங்கு வந்தவர்களுக்கு உண்மையான உணர்வை ஏற்படுத்தின.
பார்வையாளர்கள் படம் எடுக்கக் கூடிய வகையில், வெளியில் மாட்டு வண்டி, கரும்புடன் பொங்கல் பானை, கோவில் மாதிரி, சின்ன வீடு மற்றும் தோரணம் ஆகியவை அழகாக அமைக்கப்பட்டு, கிராமப்புற பொங்கல் திருவிழாவின் சூழலைக் கொண்டுவந்திருந்தனர். இது பங்கேற்பாளர்களுக்கு சிற்றூர் வாழ்வின் உணர்வை நேரடியாக உணரச் செய்தது
இதனைத் தொடர்ந்து பகல் ஒரு மணியளவில், Gats இசைக்கருவி குழுவில் இருந்த குழந்தைகள் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் குறித்த வேளையில் தொடங்கியது. நிகழ்ச்சிகள் தொடங்கிய ஒரு சில மணித்துளிகளிலேயே விழா அரங்கம், உட்காருவதற்கும் இடம் இல்லாமல், அட்லாண்டா மக்களின் கூட்டத்தால் அலைமோதியது.
முதல் நடனமாக GATS இன் நடனக்குழுவினர் பொங்கலின் நான்கு நாட்களையும் விவரித்து உரையாடலுடன் கூடிய நடனத்தை கொடுத்தது நிகழ்ச்சிக்கான முத்தாய்ப்பாக இருந்தது. இசை நிகழ்ச்சி, பாடல், நடனம் என்று நம் அட்லாண்டா மக்களின் தனித்துவமான திறமைகளை விழா மேடையில் காண முடிந்தது. சிறு குழந்தைகள் முதல் , பெரியவர்கள் வரை வயது வரம்பின்றி, கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தார்கள்.
நமது மரபு நடனமான பறை நடனம் நடைபெற்ற போது பார்வையாளர்கள் அனைவருமே பறை இசையோடு ஒன்றி,கையொலியுடனும், மகிழ்வொலியுடனும் பறை ஆட்டத்தைச் சுவைத்து மகிழ்ந்தனர்.
கலைநிகழ்ச்சிகளின் நடுவில், லெகோ கட்டமைப்பு, மாறுவேடப்போட்டி, பூ கட்டுதல், சர்க்கரை பொங்கல், குறுங்காணொளிகள், ஹைக்கூ / குறுங்கவிதைகள் ஆகிய பொங்கல் சிறப்புப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், நமது தமிழ்ச்சங்க செயற்குழுவின் முயற்சியால், உலகத் தாய்மொழி நாளான, பிப்ரவரி 21 ஆம் நாளில் தொடங்கி 27 ஆம் நாள் வரை, தமிழ் வாரமாக ஜார்ஜியா மாநில அரசு பறைசாற்றப்பட்ட செய்தியும், இந்தப் பறை சாற்றலின் அறிக்கையும் விழா மேடையில் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதே போல அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் கைபேசி செயலி முறையாக வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில் இதற்கு பேருதவியாக இருந்த அனைவரும் வரவழைக்கப்பட்டு, வர இயலாதவர்களின் பெயர்கள் மேடையில் அறிவிக்கப்பட்டு தன்னார்வலர்களுக்குப் பெருமை சேர்க்கப்பட்டது.
தமிழரின் பொங்கல் என்ற காணொளி பெரிய திரையில் நமது மக்களுக்காக வெளியிடப்பட்டது. நமது தமிழர்களின் வரலாற்றில் பொங்கல் எப்படியெல்லாம் இருந்தது என்பதை இது விளக்கிக் கூறிற்று. இந்தக் காணொளி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது நிறைவாக இருந்தது.
மேலும், நிகழ்ச்சியின் சிறப்பாக இசை மழை நிகழ்ச்சி இருந்தது பிஞ்சு குழந்தைகளிலிருந்து வயதான பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன்ஆடினார்கள்.
நிகழ்ச்சி முழுவதும் இருந்து ஒலியமைப்பை சரியாக பார்த்துக் கொடுத்த Talent AV Productions க்கு சிறப்பு நன்றி.
இந்நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு கொடையளித்து உதவிய அனைத்து புரவலர்களுக்கும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
புரவலர்கள் பட்டியல்:
Integrated (தலைமைப் புரவலர்) , Venkat Samynathan, Tanishq USA, Sikal Adhipathi and Rowles LLC, Octave, Onsite IT Advisors and Belly button , Talent AV Productions (JIJO), Naren and Aish Realty, Come to Chutney, Girish Modi, Reflections Event Space
இவ்வாறு நம் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா சிறப்பான கொண்டாட்டத்துடன் இனிதே நிறைவடைந்தது!

நிகழ்ச்சிக்குப் பேருதவியாக இருந்த புரவலர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், இளைஞர் தன்னார்வலர்களுக்கும், போட்டித் ஒருங்கிணைப்பாளர்களுக்கும், கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மேலும் அனைத்து மக்களுக்கும் இந்த நேரத்தில் தமிழ்ச்சங்கத்தின் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் !
Pongal 2026 விழா – முக்கிய நிகழ்வுகள் மற்றும் சிறப்புகள்
11 மணி நேரம் தொடர்ச்சியான பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி
700 உறுப்பினர்கள் பொங்கல் 2026 நிகழ்வை கொண்டாடி, ஆதரித்து மற்றும் அனுபவித்தனர்
12 நன்கொடையாளர்
43 இளைஞர் தன்னார்வலர்கள்
22 பிற நிகழ்ச்சி தன்னார்வலர்கள் உணவு, அலங்காரம், நிகழ்ச்சி தொகுப்பாளர்
25 கலை நிகழ்ச்சிகள், 28 கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் / நடன பயிற்சியாளர்கள்
271 கலை நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
15 போட்டிகள், 44 பங்கேற்பாளர்கள் பரிசு பெற்றனர்
71 ஆண்ட்ராய்டு பயனர்கள் மற்றும் 227 ஐபோன் பயனர்கள் GATamilSangam செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்
நிகழ்ச்சியின் புகைப்படங்களைக் காண கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்:
https://tinyurl.com/PongalVizhaPhotos2026
நன்றி,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்
Greater Atlanta Tamil Sangam 2026






